இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை: இரண்டு 'கிராமி' விருதுகள் பெற்றார்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, "ஸ்லம் டாக் மில்லினர்' திரைப்படத்துக்கு, இசையமைத்ததற்காக இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் சிறந்த இசைக்கு ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள நேஷனல் அகடமி ஆப் ரெக்கார்ட்டிங் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு, கடந்த 1958ம் ஆண்டு முதல் இந்த விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. "கிராமபோன் விருது' என்றழைக்கப்பட்ட இந்த விருது, தற்போது "கிராமி' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆண்டு "ஸ்லம் டாக் மில்லினர்' என்ற படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில், அவருடைய பின்னணி இசைக்கு ஒரு விருதும், "ஜெய் ஹோ' என்ற பாடலை இசையமைத்ததற்கு மற்றொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதே படத்துக்காக, ரஹ்மானுக்கு கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடந்த விழாவில், இந்த விருதை பெற்றுக்கொண்ட ரஹ்மான், வழக்கம் போல் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து ரஹ்மான் குறிப்பிடுகையில், "இந்த விருதுகள் எல்லாம் கிடைத்ததற்காக, நான் ஹாலிவுட்டுக்கு தாவி விடமாட்டேன். தொடர்ந்து இந்தியப் படங்களுக்கு இசையமைப்பேன். இசைக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும், எனக்கு கிடைத்த இந்த விருது, என்னை இன்னும் மேம்படுத்த உதவும். இசைக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில், தந்தை போன்றது இந்த கிராமி விருது. இந்த விருதை பெற்றதன் மூலம், எனக்கு பொறுப்புகள் கூடியுள்ளன. திரை இசையில், இன்னும் புதிய யுக்திகளை கையாளுவேன்' என்றார். இந்த விழாவில், மறைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆர் அண்ட் பி ஆல்பத்தில் கொடிகட்டிப் பறந்த 28 வயதான பெண்பாடகி பியான்ஸ், அதிக அதிகமாக ஐந்து விருதுகளைப் பெற்று, அனைவரையும் கவர்ந்தார்.
Thanks to dinamalar.com
2 கிராமி விருதுகள் வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு இசைய அமைத்ததற்காகவும், அப்படத்தின் பின்னணி இசைக்காகவும் 2 கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார்.இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றிரவு நடந்தது.
இதில் திரைப்படத்திற்கான சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த திரைப்பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படம் இடம் பெற்றிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட 2 பிரிவுகளிலும் கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார்.
சிறந்த பாடலுக்கான விருது பாடலாசிரியர் குல்சார், தன்வீ ஷா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
கிராமி விருது நிகழ்ச்சி நடந்த ஸ்டேபிள்ஸ் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “2 கிராமி விருதுகளை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சாதனை புரிய உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Thanks to tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக