கருணாநிதி பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த த்ரிஷா, ப்ரியாமணி, ஸ்ரேயா, பாவனாவுக்கு தடை!!
முதல்வர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, பாவனா மற்றும் ப்ரியாமணிக்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்ஸி அறிவித்துள்ளது.
சினிமாக்காரர்களுக்கு முதல்வர் கருணாநிதி அவ்வப்போது அள்ளிவிடும் சலுகைகளுக்காக திரையுலகம் சார்பில் வருகிற 6-ந் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடக்கிறது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடுகின்றனர். கிட்டத்தட்ட 6 மணிநேரத்துக்கும் மேல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி கவரேஜ் செய்கிறது.
முன்னணி நடிகைகள் அனைவரும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது மேடையில் ஆடிவிட வேண்டும் என்று அனைவருக்கும் பெப்ஸி சார்பில் அறிவிக்கப்பட்டது.
பெரும்பாலான நடிகைகள் ஒப்புக் கொண்டனர். நமீதா, சினேகா, தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகள் ஏற்கெனவே மானாட மயிலாட புகழ் கலா மேற்பார்வையில் நடனப்பயிற்சி எடுத்து வருகின்றனர்.
ஆனால் த்ரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். விழாவுக்கு வேண்டுமானால் வருகிறோம், ஆனால் டான்ஸெல்லாம் ஆட முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது (ஸ்ரேயா ஏற்கெனவே முதல்வர் கருணாநிதிக்கு எடுத்த பாராட்டு விழா மேடையில் ஆடியுள்ளார். இவர் இப்போது மறுப்பு தெரிவித்துள்ளதன் காரணம் தெரியவில்லை!).
இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என பெப்சி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆட மறுத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனராம். இதனால் இந்த நடிகைகளின் வைராக்கியம் இன்று மாலைக்குள் கரைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல இந்த மேடையில் நடனம் ஆடாத சில ஹீரோக்களுக்கும் தடை மற்றும் ஒத்துழைப்பு மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரோடு ஒத்துப் போகணும்... இல்லேன்னா மிரட்டவும் செய்வோம்!-வி.சி. குகநாதன்
ஒரு அரசியல் கட்சித் தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவது போல, குறிப்பிட்ட சினிமா அமைப்புகளுக்கு அதன் உறுப்பினர்கள் கட்டுப்பட்டே தீர வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வழிக்குக் கொண்டுவருவோம்.. மிரட்டவும் செய்வோம்" என்று பகிரங்கமாகவே தெரிவித்தார் ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன்.
அவர் சொன்னதை ஆதரித்துப் பேசினார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன்.
தேவ விஜயம் பிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குகநாதன் பேசியது:
சினிமா கலைஞர்களுக்காக எவ்வளவோ செய்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு நன்றி சொல்ல முறையாக விழா எடுக்கிறோம். அதில் பங்கேற்பதில் என்ன கஷ்டம்?.
திரைப்பட அமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி என்றால், அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதிரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதானே தொண்டர்களின் கடமை. அதை விட்டுவிட்டு விதண்டாவாதம் செய்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் சிலர் ஆதரவு தருகிறார்கள்.
வற்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. நாங்கள் மிரட்டவில்லை... வற்புறுத்தினோம்.
ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்பது பழமொழி. அதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ அதேபோல இருக்குமிடம் தெரியாமலும் செய்ய முடியும்.
நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம்.
என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்... என்ன செய்ய முடியும் இவர்களால் என்றார்.
அடுத்து பேச வந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன், இங்கே விசி குகநாதன் பேசியதை முழுமையாக ஆதரிக்கிறேன். நான் பேச நினைத்ததையெல்லாம் அவர் பேசிவிட்டார்.
நாங்கள் யாரைச் சொல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். மீடியாக்காரர்கள்தான் இதைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள் என்றார் சம்பந்தமில்லாமல்.
இந்த இருவரின் பேச்சும் திரையுலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர்களுக்கான பகிரங்க சவாலாகவே இதை திரையுலகம் பார்க்கிறது. நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று அங்கேயே கேள்வி எழுப்பினார் விழாவுக்கு வந்த ஒரு நடிகர்.
கேள்வி கேட்ட இயக்குநர் அதிரடி நீக்கம்... இது டைரக்டர் சங்க கலாட்டா!
தங்கள் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேல்முருகன் என்ற இயக்குநரை சங்கத்திலிருந்தே அதிரடியாகத் தூக்கிவிட்டனர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவும், செல்வமணியும் என்ற குற்றச்சாட்டுதான் இப்போதைய கோடம்பாக்க பரபரப்பு.
இதன் பின்னணி பற்றி விசாரித்தோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாரதிராஜா, செல்வமணி கோஷ்டியை எதிர்த்து தேர்தலில் நின்றவர் வேல்முருகன். ஆட்டோகிராப்பில் பிரதான காமெடியன் போல வந்தவர். இப்போதும் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார். மருதாச்சலம் என்ற படம் [^] இப்போது இவரது இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே கல்தா கொடுத்து அவரது எதிர்காலத்துக்கே உலை வைத்திருக்கிறது சங்கம்.
எதனால் இந்த நீக்கம்?
கடந்த வாரம் இந்த சங்கத்தின் சார்பாக நடந்த பொதுக்குழுவில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தாராம் வேல்முருகன். அதில்,
பதவிக்கு வந்து 100 நாட்களில் செய்வேன் என்று உறுதியளித்த திட்டங்களும் வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளதே, எப்போது நிறைவேற்றுவீர்கள்?
உங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் தேர்வு செய்தோம். நீங்களோ அரசியல் [^] கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு சங்கத்தின் இமேஜை டேமேஜ் செய்கிறீர்கள்?
தமிழ் ஈழப் பிரச்சினையை உங்கள் தனிப்பட்ட செல்வாக்குக்காகப் பயன்படுத்திவிட்டீர்கள்..., என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தாராம் வேல் முருகன். இதுதான் பாரதிராஜாவையும் செல்வமணியையும் கோபத்தின் உச்சிக்கே போக வைத்துவிட்டதாம்.
உடனே ஒரு இயக்குநரை விட்டு தீர்மானத்தை கொண்டு வந்து வேல்முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியிருக்கிறாரகள்.
"இப்படி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் முன் விளக்கம் தரக் கூட எனக்கு அவகாசம் கொடுக்கவில்லை. முறையான அறிவிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் போல இஷ்டத்துக்கும் முடிவு எடுத்தால் எப்படி? சங்கத்துக்கு நான் உறுப்பினர் மட்டும்தான்... சங்க நிர்வாகிகளுக்கு அடிமையல்ல.
இப்படி நடவடிக்கை எடுத்ததன் மூலம் எனக்கு படங்கள் கிடைக்காமல் செய்து வாழ்வாதரத்தை பறிக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" என்று கோர்ட்டுக்குப் போய் விட்டார் வேல்முருகன்.
பாரதிராஜா, செல்வமணி இருவருக்கும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். தனக்கு ஆதரவான இயக்குனர்களிடம் கையெழுத்து வேட்டையும் நடத்துகிறார்.
இயக்குநர்கள் சங்கம் இதுபற்றி எந்த விளக்கமும் தர இதுவரை முன்வரவில்லை.
நியாயம் ஜெயிக்கும், அது யார் பக்கமிருந்தாலும்!